மன் கி பாத்:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் போது இஸ்ரோ யூடியூப் சேனலில் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துக் கொண்டு இருந்தனர். விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருடன் ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கியது. அந்த நாள் 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது. சந்திரயான் 3 இன் வெற்றிக்குப் பிறகு, G20 மாநாட்டின் பிரமாண்ட வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியது. ஜி20 மாநாடு நடந்த பாரதமண்டபம் பிரபலமாக மாறிவிட்டது. அங்கு மக்கள் செல்ஃபி எடுத்து பெருமையுடன் பதிவிடுகிறார்கள்” என்றார் மோடி.
"இந்தியா மீதான உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது”
தொடர்ந்து பேசிய அவர், ”ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்தியா மீதான உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் ஜி-20 மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் நம் நாட்டின் பாரம்பரியங்கள், பல்வேறு வகையான உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரங்களை அறிந்து கொண்டனர். இந்தியாவின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய கலாசாரம், இசை தற்போது உலகளாவியதாகிவிட்டது.
டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது, பல உலகத் தலைவர்கள் ஒன்றாக ராஜ்காட் வந்து காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். அந்தக் காட்சியை யாராலும் மறக்க முடியும். காந்தியம் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அந்த ஒரு சம்பவமே போதுமான எடுத்துக்காட்டு” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"'மேட் இன் இந்தியா' பொருட்களை வாங்க வேண்டும்”
மேலும்,”நம் நாட்டிலும் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. நாம் எல்லாரும் வீட்டிற்கு பொருட்களை வாங்குவோம். பண்டிகைக் காலங்களில் 'மேட் இன் இந்தியா' பொருட்களை மட்டுமே வாங்கி பரிசளிக்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஒய்சாலா கோவில்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பதுத பெருமைக்குரியதாகும். நம்முடைய வரலாற்று மற்றும் கலாச்சார ஸ்தலங்கள் உலக பாராம்பரிய தலங்களாக அங்கீகாரம் பெற்றதற்கு அடிப்படை இந்தியாவின் முயற்சி ஆகும். இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சொத்துக்களின் எண்ணிக்கை தற்போது 42 ஆக உள்ளது.
எண்ணங்கள் உறுதியானதாகவும், எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், எந்த வேலையும் கடினமாக இருக்காது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி சகுந்தலா சர்தார் இது எடுத்துக்காட்டாக உள்ளார். இன்று, அவர் பல பெண்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளார்” என்றார் பிரதமர் மோடி.
மேலும் படிக்க