கோவையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்ஷவத்தின் இறுதிப் போட்டியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.


கிராமோத்ஷவம்:


2004 ஆம் ஆண்டு சத்குருவால் தொடங்கப்பட்ட கிராமோத்ஷவம் எனும் இந்த சமூக முயற்சியானது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் விளையாட்டு மற்றும் விளையாட்டின் உணர்வைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டிற்கான அந்த விழா,  ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. 194 க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவத்தில் 60,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  10,000 க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள், கபடி மற்றும் த்ரோபால் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.


இறுதிப்போட்டி:


இந்நிலையில் ஈஷா கிராமோத்ஷவத்தின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மத்திய அமச்சர் அனுராக் தாக்கூர், நடிகர் சந்தானம் மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். 112 அடி உயர ஆதியோகியின் பிரமிக்க வைக்கும் பின்னணியில் நடத்தப்பட்ட இந்த இறுதிப்போட்டியில், கிராமப்புற திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். 


சாதிய தடைகளை உடைக்கும் கிராமோத்ஷவம்:


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், “ஈஷா கிராமோத்சவம் சமூக மாற்றத்திற்கான ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது கிராம மக்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், சமூகத்தில் உள்ள சாதிய தடைகளை உடைக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், மீள்குடியேற்றமான கிராமப்புற உணர்வை மீட்டெடுக்கவும் உதவுகிறது.  சத்குரு மேற்கொண்ட அற்புதமான முயற்சி வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்கு கிராமப்புற விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஈஷா கிராமோத்சவம் 2004 இல் தொடங்கப்பட்டது, இங்கு விளையாட்டு வீரர்களை பார்க்க முடிந்தது, அவர்களில் சிலர் கூலித் தொழிலாளிகள், விவசாயம் மற்றும் மீனவர்களாக வேலை செய்கிறார்கள், ஆனால் அவர்களுள் என்னால் விளையாட்டிற்கான போட்டி மனப்பான்மையைக் காண முடிந்தது” என அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.


விளையாட்டு அவசியம் - சத்குரு:


நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, “கொண்டாட்டமே வாழ்க்கையின் அடிப்படை, நீங்கள் விளையாடினால் மட்டுமே அது சாத்தியமாகும். கிராமோத்ஷவத்தால் 25,000 கிராமங்களில், 60,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் அந்த கிராமங்களில் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஒரு கட்டத்தில் அனைத்தையும் மறந்து துள்ளிக் குதித்து, கத்தி,  சிரித்து, அழுது மகிழ்ந்து இருப்பார்கள். எனவே, அனைவரும் வாழ்க்கையில் விளையாடுங்கள்” என வலியுறுத்தினார்.


போட்டி முடிவுகள்:


வாலிபால் போட்டியில் FEC சித்துராஜபுரம் அணியை வீழ்த்தி சேலம் உத்தமசோழபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. த்ரோ பால் போட்டியில் கர்நாடகாவின் மரகோடுவை சேர்ந்த பிளாக் பாந்தர் அணியை வீழ்த்தி, கோவையை சேர்ந்த பிஜி புதூர் அணி கோப்பைய வென்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கபடி போட்டியில், திண்டுக்கல்லை விழ்த்தி ஈரோடு மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  பாராலிம்பிக் போட்டியில், கோவை பாரா வாலிபால் சங்கம், கன்னியாகுமரி குமரி கிங்ஸ் அணியை வீழ்த்தி, பாராலிம்பிக் வாலிபால் சாம்பியன்ஷிப்பை வென்றது.