பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு  இந்நிய வாணொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதுவரை 95 ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி உள்ளார். அதன்படி, இந்த ஆண்டிற்கான கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


"கவனமாக இருங்கள்"


அப்போது அவர் பேசியதாவது, ” உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து, கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.






மேலும், "கடந்த சில ஆண்டுகளாக, சுகாதாரத்துறையில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்தியாவில் பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது, காலா அசார்  என்ற நோய் நாட்டில் பரவ தொடங்கியுள்ளது.  இந்த நோயானது, பீகார் மற்றும் ஜார்்க்கண்டின் 4 மாவட்டங்களில் பரவியுள்ளது. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.


”யோகா பயனளிக்கும்”


இதனை தொடர்ந்து பேசிய அவர், "மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு யோகா பயன்தரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 15 சதவீதம் குறைக்கப்படுகிறது" என்று கூறினார். மருத்துவ அறிவியலில் யோகாவும், ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிப்படும். பாரம்பரிய மருத்துவ வளர்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸில் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் நிறுவப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


"நதிகளை சுத்தமாக வைப்பது நமது பொறுப்பு"


கங்கை போன்ற நதிகளை தூய்மையாக வைத்திருப்பது நமது தலையாய பொறுப்பு என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். கங்கை நதியானது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மிகுந்த பிணைப்பைக் கொண்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் வேரூன்றியிருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


"5வது இடத்தில் இந்தியா"


”இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. அதே நேரத்தில் சுதந்திரத்தின் 100-வது ஆண்டிற்கான பயணத்திற்கு தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், உலகளவில், இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது" என பிரதமர் மோடி பெருமையாக பேசியுள்ளார்.