மீண்டும் அதிகரித்த கொரோனா
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பரவி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ், அதாவது சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என புரட்டி எடுத்ததைப் போலவே அடுத்த கொரோனா அலையாக, உருமாறிய கொரோனா பரவலும் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் தொற்றால், வயதில் முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டால், அதனை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு என குறிப்பிடாமல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என குறிப்பிடுகிறது. இதனால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக காட்டப்படுகிறது. ஆனால், தகன மையங்களில் உடல்கள் நிரம்பி வழிவதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன.
சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க காராணமே ”ஜீரோ கோவிட்” என்ற நடைமுறையை சீன அரசு நடைமுறைப்படுத்தி மக்களை எந்தவிதமான கட்டுப்பாடுகள் இன்றியும், குறைந்த பட்சம் முகக்கவசம் அணியக் கூட அரசு அறிவுறுத்தாததுதான் காராணம் என கூறப்படுகிறது.