உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள புரோலா கிராமத்தில் கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாகக் கூறி தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ராடூனில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள புரோலா கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பாதிரியார் தொழுகை தலைமையில் நேற்று (டிச.24) மதியம் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
பாதிரியார் மீது கும்பல் தாக்குதல்
அப்போது குறைந்தது 30 நபர்கள் கொண்ட குழு, ஆயுதங்கள், தடிகளுடன் அங்கு சென்று கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாதிரியார், அவரது மனைவி உட்பட 6 பேரை முன்னதாக காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டதாகக் கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் முன்னதாக ஆளும் பாஜக அரசால் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டதோடு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் பல காலமாகவே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா இன்று களைக்கட்டியுள்ளது.
நேற்று மாலையான ’கிறிஸ்துமஸ் ஈவ்’ தொடங்கி, நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் வரை தேவாலயங்களில் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டத் தொடங்கியது. எனினும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் திரளாக தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நூற்றாண்டு பழமையான சென்னையின் புனித தோமையார் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் மழையை பொருட்படுத்தாது குடும்பங்களுடன் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
அதே போல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம், தூத்துக்குடி, பனிமய மாதா தேவாலயம், புதுச்சேரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
மேலும் தலைநகர் டெல்லி கதீட்ரல் தேவாலயம், கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சியில் உள்ள பிரபல தேவாலயங்களில், கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் பெங்களூரு மாநகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது.