இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் படுக்கையில் இருக்கும்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சந்திக்கும் படமும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதில் மன்மோகன் சிங் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார். இந்த நிலையில், இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது மன்மோகன் சிங் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க அவரது அரைக்கு சென்றபோது அதை படம் எடுக்க புகைப்படக் கலைஞரையும் உள்ளே அழைத்துச் சென்றதாகவும், அப்போதே தனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் மன்மோகன் சிங்கின் மகள் டாமன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மறுப்பு தெரிவித்தும் அவரது பேச்சை கேட்காமல் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் படம் எடுக்க புகைப்படக் கலைஞரை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளே அழைத்துச் சென்றார். எனது தந்தை (மன்மோகன் சிங்) டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலையாக இருக்கிறார். ஆனால் அவரது நோய் எதிர்ப்பு திறன் குறைவாகவே இருக்கிறது. எனது தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது அறைக்குள் பார்வையாளர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை." என அவர் தெரிவித்துள்ளார்.
"மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எனது தந்தையை சந்திக்க வந்து அக்கரையுடன் விசாரித்தார். இது மிகவும் நல்ல விசயம். ஆனால், எனது தந்தையை இந்த நிலையில் வைத்து படமெடுக்க எனது தாய்க்கு விருப்பம் இல்லை. ஆனால், அதை தடுக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. எனது தாய் அமைச்சருடன் வந்த அந்த புகைப்பட கலைஞரை அறையை விட்டு வெளியேறுமாறும் வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை அப்போது நிராகரிக்கப்பட்டது. எனது பெற்றோர் அந்த கடினமான சூழலை சமாளிக்க போராடினர்." என அவர் தெரிவித்துள்ளார்.
இதை எங்கும் பகிர வேண்டாம் என மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியும் அவர் அதை கேட்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நலம் விசாரித்ததாக ட்வீட் செய்திருந்தார். அமைச்சரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த படங்களை அகற்றினார் மன்சுக் மாண்டவியா. ஆனால், ஏற்கனவே பலராலும் இப்படம் பகிரப்பட்டு விட்டது. ஆனால், இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் எந்த விளக்க அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தனது 89 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.