மதுபானக் கொள்கை மீறல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த எப்ஐஆரில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முதல் அக்யூஸ்ட் என சேர்க்கப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 15 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


 






ஊழல், குற்றவியல் சதி மற்றும் பொய்யாக கணக்குகளை காட்டியது போன்றவை 11 பக்க முதல் தகவல் அறிக்கையில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. கலால் துறை அமைச்சராக உள்ள சிசோடியா எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது அமைச்சரவை சகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


முன்னாள் கலால் ஆணையர் கோபி கிருஷ்ணா, துணை ஆணையர் ஆனந்த் திவாரி மற்றும் உதவி ஆணையர் பங்கஜ் பட்நாகர் ஆகியோரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


மதுபான நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் கலால் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தியதில் தீவிரமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகளான அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே, மதுபான உரிமதாரர்களிடமிருந்து கமிஷன் வசூலித்து குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.


தினேஷ் அரோரா நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இண்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சமீர் மகேந்திரு 1 கோடி ரூபாய் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல, சமீர் மகேந்திரு, அர்ஜுன் பாண்டேக்கு 2-4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.


 






டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநரின் அனுமதியின்றி டெல்லியில் யாரெல்லாம் மது விற்கலாம் என்ற புதிய கொள்கையை சிசோடியா அறிமுகப்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. புதிய கொள்கை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முறைகேடு புகாரை தொடர்ந்து விசாரணை அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 30 அன்று கொள்கை திரும்பப் பெறப்பட்டது.


மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்த நிலையில், எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு ஆம் ஆத்மியின் நம்பர் டூ தலைவராக இருக்கும் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை சோதனை நடத்தியது.