துணை முதல்வருக்கே கட்டுப்பாடு...வெளிநாடுகளுக்கு செல்ல தடை...ஆம் ஆத்மி கட்சியை இலக்காக மாற்றிய பாஜக 

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் இன்று தெரிவித்தனர்.

Continues below advertisement

மதுபானக் கொள்கை மீறல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் இன்று தெரிவித்தனர். லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கலால் துறையைக் கையாளும் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் ஏழு மாநிலங்களில் உள்ள 31 இடங்களில் சிபிஐ வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

சிபிஐயின் எப்ஐஆரில் 15 குற்றவாளிகள் அடங்கிய பட்டியலில் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஊழல், குற்றவியல் சதி மற்றும் பொய்யான கணக்குளை உருவாக்குதல் ஆகியவை 11 பக்க ஆவணத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

லுக் அவுட் நோட்டீஸ் பற்றிய தகவல் வெளியானவுடன், பிரதமர் மோடியை விமர்சித்து சிசோடியா ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தன. எதுவும் கிடைக்கவில்லை. இப்போது, ​​​​எனக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். இது என்ன வித்தை மோடி? நான் இங்கே டெல்லியில் இருக்கிறேன். தயவு செய்து நான் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் டெல்லியின் கல்வி மற்றும் சுகாதாரத் துறை பற்றி விவாதித்து வருவதால் பாஜக ஆளும் மத்திய அரசும், பிரதமரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என சனிக்கிழமையன்று சிசோடியா குற்றம் சாட்டினார்.  
அவரது வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு "உயர் மட்ட தலைமை" அறிவுறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு முக்கிய சவாலாக பாஜகவினர் கருதுவதால், அவரை நிறுத்த மத்திய அரசு விரும்புவதாக சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். 2024 தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேயான போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கலால் ஆணையர் கோபி கிருஷ்ணா, துணை ஆணையர் ஆனந்த் திவாரி மற்றும் உதவி ஆணையர் பங்கஜ் பட்நாகர் ஆகியோரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுபான நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் கலால் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தியதில் தீவிரமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகளான அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே, மதுபான உரிமதாரர்களிடமிருந்து கமிஷன் வசூலித்து குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

தினேஷ் அரோரா நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இண்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சமீர் மகேந்திரு 1 கோடி ரூபாய் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல, சமீர் மகேந்திரு, அர்ஜுன் பாண்டேக்கு 2-4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநரின் அனுமதியின்றி டெல்லியில் யாரெல்லாம் மது விற்கலாம் என்ற புதிய கொள்கையை சிசோடியா அறிமுகப்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது. புதிய கொள்கை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முறைகேடு புகாரை தொடர்ந்து விசாரணை அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 30 அன்று கொள்கை திரும்பப் பெறப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola