இந்தியாவில் சுகாதார சேவை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதற்கு நற்சான்றுகளும் இருக்கின்றன சில மோசமான உதாரணங்களும் இருக்கின்றன.


கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை சமாளிப்பது எப்படி என்பதற்கு இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
ஹீல் இன் இந்தியா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து இந்தியாவை மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறது. 


இதே வேளையில் தான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சிகரமான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.


மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவார் ரேஷ்மா பாய். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் சமுதாய மருத்துவநலக் கூடத்திற்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்லுமாறு சொல்லியுள்ளார்.


மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரேஷ்மா பாயின் தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக மொரேனா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரேஷ்மா பாய் தரம்கர் பகுதியில் இருந்து சமுதாய நலக் கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் வேறொரு அவசர சிகிச்சையில் இருந்துள்ளார். இதனால் மருத்துவர் தர்மேந்திர ராஜ்புட் வார்டு பாய் அனந்த ராமிடம் தொலைபேசியில் எப்படி முதலுதவி செய்வது என்று கூறியுள்ளார். அதன்படி காயத்தின் மீது ஒரு பெரிய காட்டன் பேடை வைத்து அதன் மீது கார்டு போர்டு போன்ற ஏதேனும் ஒன்றை வைத்து கட்டிவிட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கச் சொல்லியுள்ளார். ஆனால் அந்த வார்டு பாயோ கார்டு போர்டு இல்லாததால் அங்கிருந்த தடிமனான காண்டம் அட்டையை வைத்துக் கட்டியுள்ளார் என்று விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில் காயத்துக்குக் கட்டுப்போட்ட நபரை மாவட்ட சுகாதார நலத் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.


இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி நாரோட்டம் பார்கவ் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.