டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 


மணீஷ் சிசோடியா கைது:


கடந்த ஒரு வாரமாக சிபிஐ காவலில் உள்ள அவரின் காவல் நேற்று மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அவர் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் காவலை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.


எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்:


இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


எதேச்சதிகாரம்:


அந்த கடிதத்தில், "இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளின் அப்பட்டமான நடவடிக்கை, நாம் ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது.


எதிர்கட்சி தலைவர்களுக்கு எதிரான நீண்ட வேட்டைக்குப் பிறகு, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் இருந்த போதிலும் முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அவரை கைது செய்தது.


2014 முதல் உங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகளால் வழக்கு பதிவு செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட, சோதனை அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளின் மொத்த எண்ணிக்கையில், அதிகபட்சம் எதிர்க்கட்சியினர்தான். சுவாரஸ்யமாக, பாஜகவில் சேரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் விசாரணை அமைப்புகள் மெதுவாக விசாரணை செய்கின்றன" என குறிப்பிட்டுள்ளனர்.


காங்கிரஸ், திமுக மிஸ்ஸிங்:


ஆனால், இந்த கடிதத்தில் காங்கிரஸ் சார்பில் யாரும் கையெழுத்திடவில்லை. திமுக, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பிலும் யாரும் கையெழுத்திடவில்லை.