Manipur Violence: மணிப்பூரில் இரண்டு பெண்களை நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளிப்பிய நிலையில், அதேபோன்று மற்றொரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. 


நாட்டை உலுக்கிய சம்பவம்:


மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைள மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வீடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கும் அரசின் செயலற்ற தன்மைக்கும் கடுமையாகக் கண்டனங்களை தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக  இதுவரை நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


மீண்டும் ஒரு பகீர் வீடியோ


இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒருவரின் தலை வெட்டப்பட்டு தனியாக மூங்கில் குச்சியில் தொங்கவிடப்பட்டது போன்று வீடியோ வெளியாகி இருக்கிறது. இவர் குகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்,  இவர் டேவிட் தீக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் பிஷ்னுபூர் மாவட்டத்தில்  ஜூலை 2ஆம் தேதி நடந்துள்ளது.  ஜூலை 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் டேவிட் தீக்கை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதில் தலை பகுதியை மட்டும் மூங்கில் குச்சிகளால் ஆன வேலியில் தொங்கவிட்டுள்ளனர்.  இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இப்படி நடக்க என்ன காரணம்?


மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்தி சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். இந்த சூழலில்தான், மெய்தி சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.