Manipur Violence :மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 8 வயது சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வன்முறை நீட்டிப்பு


மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக வன்முறையான சூழலே நிலவி வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தார்.


ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வராததது போல் தெரிகிறது. வன்முறை நாளுக்கு நாள் அதிகமாக, அங்கு அமைதி திரும்பாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு மே 10ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


கொடூரம்


இருப்பினும், அங்கு கலவரம் ஓயாதது போல் தெரிகிறது. இதற்கிடையில், கலவர மாநிலமாக இருக்கும் மணிப்பூரில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அதன்படி, குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது குழு ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல்  கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


முன்னதாக, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதல் கொல்லப்பட்டார். மேலும், அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையினர் 2 பேரும் காயம் அடைந்துள்ளனர். இதுபோன்று கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 


என்ன காரணம்?


மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.


எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.