உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான், பிரபல ரவுடி அதிக் அகமது, மாநில காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருக்கும் போதே சுட்டு கொல்லப்பட்டார்.


உத்தர பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி: 


இந்த சூழலில், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நீதிமன்றத்திற்கு வெளியே பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா சுடப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் போல் வேடமிட்டு வந்த மர்ம நபர்தான், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். 


சுடப்பட்ட நிலையில், நிலைகுலைந்த சஞ்சீவ் ஜீவா, தரையில் கீழே விழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில், துப்பாக்கியுடன் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 


இதுகுறித்து லக்னோ காவல்துறையின் இணை ஆணையர் உபேந்திர அகர்வால் (சட்டம் ஒழுங்கு) கூறுகையில், "இந்த சம்பவம் பிற்பகல் 3:30 மணியளவில் நடந்துள்ளது. அவர் முதுகில் சுடப்பட்டார். எங்கள் இரு போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் காயமடைந்தனர்.


நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நுழைந்த மர்ம நபர்:


சஞ்சீவ் ஜீவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவ் ஜீவாவை ஒருவர் சுட்டாரா பலர் சுட்டனாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். 


ஆனால், ஒருவரை மட்டுமே அவர்களால் பிடிக்க முடிந்தது. அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மேற்கு உத்தர பிரதேசத்தில், சஞ்சீவ் ஜீவா தலைமையில் ஒரு ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. அவர் மீது ஒரு 12க்கும்  மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநிலத்தில் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். மேலும் அவர் மீது உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் குறைந்தது 50 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முக்தார் அன்சாரி போன்ற கிழக்கு உத்தரபிரதேச ரவுடிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர் எப்படி ரிவால்வரை பதுங்கி வைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார் என்பது தெரியவில்லை.


உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.