பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த தருணத்தில், பழைய நாடாளுமன்றமும் புதிய நாடாளுமன்றமும் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
கன்னாட் பிரபு முதல் பிரதமர் மோடி வரை:
பிப்ரவரி 12ஆம் தேதி, 1921ஆம் ஆண்டு: கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற மாளிகைக்கு கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டினார்.
ஜனவரி 18ஆம் தேதி, 1927ஆம் ஆண்டு: அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் அவர்களால் நாடாளுமன்றம் திறக்கப்பட்டது.
ஜனவரி 19ஆம் தேதி, 1927ஆம் ஆண்டு: மத்திய சட்டப் பேரவையின் மூன்றாவது கூட்டத் தொடரின் முதல் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 9ஆம் தேதி, 1946ஆம் ஆண்டு: அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 14/15ஆம் தேதி, 1947ஆம் ஆண்டு: அரசியல் நிர்ணய சபையின் நள்ளிரவு அமர்வில் அதிகார மாற்றம் நடந்தது.
மே 13ஆம் தேதி, 1952ஆம் ஆண்டு: இரு அவைகளின் முதல் அமர்வு நடைபெற்றது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி, 1970ஆம் ஆண்டு: அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அக்டோபர் 24ஆம் தேதி, 1975ஆம் ஆண்டு: அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி, 1987ஆம் ஆண்டு: அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மே 7ஆம் தேதி, 2002ஆம் ஆண்டு: அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
மே 5ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு: அப்போதைய துணை குடியரசு தலைவர் முகமது ஹமீத் அன்சாரி மற்றும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
ஜூலை 31ஆம் தேதி, 2017ஆம் ஆண்டு: நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி, 2019ஆம் ஆண்டு: அப்போதைய துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான திட்டத்தை முன்வைத்தனர்.
டிசம்பர் 10ஆம் தேதி, 2020ஆம் ஆண்டு: புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மே 28ஆம் தேதி, 2023ஆம் ஆண்டு: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.