மணிப்பூரில் கிட்டத்தட்ட கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் இனக் கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


கடந்த 5 ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 


ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து இரு குழுக்களுக்கிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.


மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின. 


இதனால் தற்போது வரை 175 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 4 முதல் 7 லட்சம் ரூபார் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும். உயிரிழந்த மற்றும் காணாமல்போன பெண்களின் குடும்பத்துக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு அளிக்கப்படும்.


இது குறித்து காவல்துறை ஐ.ஜி முய்வா அளித்த பேட்டியில், ” மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1108 காயமடைந்துள்ளது. 32 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளது. 386 வழிபாட்டு தளங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. 1359 துப்பாக்கிகளும், 15,000 வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


பலியான 175 பேரில் 79 பேரின் உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளன. 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. 9 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.  மணிப்பூரில் நடக்கும் கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”  என குறிப்பிட்டுள்ளார்.  


"பிழைக்க முடியாம போகலாம் குழந்தைய பாத்துக்க" - வீர மரணம் அடைவதற்கு முன்பு மனைவியிடம் டிஎஸ்பி உருக்கம்


கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்