கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோ வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Continues below advertisement

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

மணிப்பூரில் பிராட்பேண்ட் இணைய சேவைக்கு அனுமதி:

Continues below advertisement

இந்த சம்பவம், தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. இதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தால், கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கி போயுள்ளது.

இந்த நிலையில், கலவரம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு பிறகு, பிராட்பேண்ட் இணைய சேவை மீதான தடையை மணிப்பூர் அரசு திரும்ப பெற்றுள்ளது. இருப்பினும், மொபைல் இன்டர்நெட் சேவை மீதான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இணைய சேவை நிலையான ஐபி மூலம் மட்டுமே இருக்கும். சம்பந்தப்பட்ட சந்தாதாரர் தற்போதைக்கு அனுமதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்த இணைப்பையும் பயன்படுத்தக் கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் எந்த வித ரவுட்டர்கள் மூலமாகவும் சந்தாதாரர்கள் வைஃபை ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்த அனுமதி இல்லை. 

மொபைல் ரீசார்ஜ், எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு, மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற ஆன்லைன் சேவைகள் தவிர, இணையதள தடையால் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் வழியாக பரவிய பொய் செய்திகள் காரணமாக மணிப்பூர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்தது. இதனால், பரப்பப்படும் பொய்யான தகவல்களை தடுக்கும் நோக்கில் அங்கு இணையம் முடக்கப்பட்டது. இந்த சூழலில், இரண்டு மாதங்களுக்கு பிறகு இணைய சேவை தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மணிப்பூரில் நடந்த வன்முறையில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.