மணிப்பூரில் நடந்து வரும் மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக்கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, கூட, இதை கடுமையாக கண்டித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்:
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், இதன் காரணமாக முடங்கி போயுள்ளது. மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய நேரத்திற்கு மட்டுமே விவாதிக்க முடியும் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. முதலில், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பை தொடர்ந்து மீண்டும் கூடிய மாநிலங்களவையில், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கார்கேவை கூல்படுத்திய துணை குடியரசு தலைவர்:
அப்போது பேசிய கார்கே, "50 உறுப்பினர்கள் 267 விதியின் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தும், கடந்த நான்கு நாட்களாக இதே போன்ற நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டும், மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு ஏன் அரசு தயாராக இல்லை. மணிப்பூர் பற்றி விவாதிக்கக் கோரியவர்களில் நானும் ஒருவன்" என்றார்.
இதற்கு பதில் அளித்த துணை குடியரசு தலைவர், "நேரம் அனுமதித்தால் விவாதம் நடக்கும். ஆனால், என் இதயத்தில் நீங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய கார்கே, "உங்கள் மனது மிகவும் பெரியது என்று எனக்குத் தெரியும். ஆனால், அது எதிர் தரப்பில் உள்ளது" என்றார். கார்கே இப்படி கூறியதும், மாநிலங்களவையே சிரிப்பலையில் மூழ்கியது. பல மாநிலங்களவை உறுப்பினர்கள் கைத்தட்டி, கரகோஷத்தை எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் பேசியதை கேட்டு துணை குடியரசு தலைவரும் சட்டென சிரித்துவிட்டார்.
முன்னதாக, நேற்று, மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவாதத்தை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த முக்கியமான விஷயத்தில் உண்மை நிலையை நாடு தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.