New Governors: கேரள ஆளுநராக இருந்த முகமது ஆரிஃப் கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
5 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளதாக குடியரசுத் தலைவர் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி,
- மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற 1984-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பல்லா, 22 ஆகஸ்ட் 2019 முதல் ஆகஸ்ட் 22, 2024 வரை மத்திய உள்துறைச் செயலாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2019ஆம் ஆண்டு முதல் கேரள ஆளுநராக இருக்கும் ஆரிப் முகமது கான், இனி பீகார் மாநில ஆளுநராகப் பணியாற்றுவார். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் பிறந்த கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் தீவிர விமர்சகர் மற்றும் ஷா பானோ வழக்கு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கான் 7வது, 8வது, 9வது மற்றும் 12வது மக்களவையில் கான்பூர் மற்றும் பஹ்ரை மக்களவை தொகுதி உறுப்பினராவார்.
- பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்-ல் அரசியல் பயணத்தைத் தொடங்கிய அர்லேகர், 1989-ல் பாஜகவில் சேர்ந்தார். கேபினட் அமைச்சராகவும், கோவா சட்டப் பேரவையின் சபாநாயகராகவும் பதவி வகித்து, பீகார் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இமாச்சலப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.
- முன்னாள் ராணுவ தளபதியும், மத்திய அமைச்சருமான ஜெனரல் விஜய் குமார் சிங் (ஓய்வு) மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 42 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சிங், 1971 வங்கதேச விடுதலைப் போரில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார் மற்றும் 1987 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகளில் பங்கேற்றார். இந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒடிசா ஆளுநரின் ராஜினாமா ஏற்பு:
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். சத்தீஸ்கரை சேர்ந்த பாஜக மூத்த தலைவரான தாஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போது மிசோரம் ஆளுநராக உள்ள ஹரி பாபு கம்பம்பட்டி ஒடிசா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். நியமனங்கள் அந்தந்த நியமனம் பெற்றவர்கள் தங்கள் அலுவலகங்களின் பொறுப்பை ஏற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர்?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் முடிந்தபிறகும், புதிய ஆளுநர் யாரும் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், ஆர்.என். ரவியின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்கும் அறிவிப்பிலும் தமிழ்நாடு ஆளுநர் பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால், அடுத்த சில காலத்திற்கு ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.