வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். மலைப்பகுதிகள் சூழ்ந்த இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது நோனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் 107வது பிராந்திய முகாம் அருகே இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான பாறைகளும், மண்ணும் சரிந்தது. இதனால், அப்பகுதியில் இருந்த பலரும் நிலச்சரிவில் சிக்கினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் துரிதமாக செயல்பட்டதால் நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் முதல்வர் பிரன்சிங் இந்த நிலச்சரிவு விபத்து குறித்து அவசர ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பிரன்சிங் மீட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மாநில முதல்வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். நிலச்சரிவில் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டு வர பலரும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருப்பதும், காணாமல் போனவர்கள் இன்னும் அதிகரிக்கும் என்பதாலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்