Manipur Issue: மணிப்பூர் கலவரம் ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்லாது உலகநாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கி கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தால் இதுவரை 142 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், இதற்கு பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தியா முழுவதும் இருந்தும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக உள்ள ப்ரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மணிப்பூர் பெண்கள்- சமூகம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்துவிட்டது. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இது போன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்…. கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…” என பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், பலரும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளத்தில் பாரதமாதாவை கலவரக்காரர்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்வதுபோன்ற கார்டூன் படம் அதிகம் பகிரப்படும் கார்டூன் படமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, “ மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.