குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை... மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் முதலமைச்சர் பைரன் சிங் அறிவிப்பு

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க பரிசீலித்து வருவதாக பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.  

Continues below advertisement

கொந்தளிப்பை ஏற்படுத்திய மணிப்பூர் பழங்குடி பெண்கள் விவகாரம்:

இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க பரிசீலித்து வருவதாக பைரன் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசிய பைரன் சிங், "தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அனைத்து குற்றவாளிகள் மீதும் மரண தண்டனைக்கான சாத்தியக்கூறுகள் உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். நம் சமூகத்தில் இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

"மணிப்பூர் பற்றி எரிகிறது"

பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம் எதிரொலித்தது.

மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் கார்கே, "மணிப்பூர் அங்கு பற்றி எரிகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்ரனர். ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். வெளியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்” என ஆவேசமாக பேசினார். 

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, மக்களவையில் எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த அமளியில், அவை நடவடிக்கைகள் நாளை காலை 11 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நான் நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.

இந்த ஜனநாயகக் கோயிலுக்கு (நாடாளுமன்றம்) பக்கத்தில் நான் நிற்கும்போது, ​​என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த நாடும் அவமானப்பட்டு விட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை வலுப்படுத்துமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.

Continues below advertisement