மணிப்பூரில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் இனி தனித்துவமான சைரன்கள் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடுமையான கலவரம் தொடங்கியது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின.
மணிப்பூரில் இன்னும் சில பகுதிகளில் பதட்டமான சூழல் தான் நிலவி வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மணிப்பூரில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களுக்கு தனித்துவமான சைரன் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை, உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டாத தனித்துவமான சைரன் கொண்டு இயக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிக்கையில், “மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைத் திறம்படப் பராமரிப்பதற்கும், ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தும் சைரன்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான விஷயத்தை மாநில அரசு கருத்தில் கொண்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க முகவர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் ஒரே மாதிரியான சைரன்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. வெவ்வேறு அதிகாரிகளால் ஒரே சைரன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடையே ஏற்படக்கூடிய தவறான புரிதலைத் தவிர்க்க, மணிப்பூர் ஆளுநர் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பிற அதிகாரிகள் பயன்படுத்தும் சைரன்களில் இருந்து தனித்துவமான சைரன்கள் பயன்படுத்தும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் பயன்படுத்தும் சைரன்களை ஒப்பிடும் போது சைரன் ஒலிக்கும் விதம் வித்தியசமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.