தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை, வியாழக்கிழமை மாலை டெல்லியில் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. சில மாதங்களுக்கு முன், அமைச்சர் உதயநிதி பேசிய சனாதனம் தொடர்பான கருத்தினால் நாடு முழுவதும் பாஜக உள்ளிட்ட சில அமைப்புகளால் பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பிரதமருடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் மீள்பணிகளுக்காக, மாநில அரசு கேட்டிருந்த நிதியை உடனடியாக வழங்க ஆவனச் செய்யும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமருடன் சேர்ந்து திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெள்ளப் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவித்து, நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அப்போது பேசிய பிரதமரும், தமிழகத்திற்கு நிறைய நிதி தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவதாக விழாவின் போதே தெரிவித்தார். ஆனால், இந்த வெள்ளப்பாதிப்பிற்காக, மாநில அரசு கேட்டிருந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது மாநில அரசு சார்பில் கூறப்படுகிறது.
பிரதமரைச் சந்தித்த போது, தமிழக தலைநகர் சென்னையில் வரும் 19-ம் தேதி தொடங்கவிருக்கும் கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் (Khelo India Youth Games 2024)தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் அமைச்சர் உதயநிதி. இது தொடர்பான தகவலை, அமைச்சர் உதயநிதி தமது எக்ஸ் சமூகதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், கேலோ விளையாட்டுப் போட்டி தொடக்க விழா அழைப்பு மட்டுமின்றி, தமிழக வெள்ளப்பாதிப்பு தொடர்பாக, மாநில அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டிருந்த நிவாரண மற்றும் மீள் பணிகளுக்குான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதையும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அண்மையில், அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு நிகழ்ச்சியொன்றில், சனாதனம் தொடர்பாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெங்கு, மலேரியா, கொரோனோ போன்று சனாதம் என்பது ஒழிக்கப்பட வேண்டுமே தவிர, எதிர்க்கப்பட வேண்டியது அல்ல என்ற வகையில் பேசியிருந்தார். நிகழ்ச்சியல் அவர் பேசிய முழு பேச்சை விட, இந்த சில வரிகள் அடங்கிய பேச்சு வட இந்தியாவில் பெரிய அளவில் பரவியது.
இந்தப் பேச்சிற்கு, பாஜக தலைவர்களும், பல்வேறு சாமியார்களும் கடும் கண்டனம் தெரிவிக்க பெரும் பிரச்சினையானது. அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலையெல்லாம் வைத்து சாமியார்கள் பேட்டியெல்லாம் கொடுத்தனர். சிற்சில போராட்டங்களையும் நடத்தினர். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியே, சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பாஜக முன்னணி தலைவர்களைக் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாநில தேர்தல்களில்கூட இந்த சனாதனப் பிரச்சினையை வைத்து பாஜக பரப்புரை செய்தது குறிப்பிடத்தக்கது. இது காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூட சில தலைவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது.
இதுபோன்ற சனாதப்பிரச்சினைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் கவனத்தை தலைநகர் டெல்லியில் தந்துள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து பேசியுள்ள அமைச்சர் உதயநிதி, நிவாரணம் தொடர்பாக முதல்வரின் கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்ததற்கு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் கூறியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக பொதுமக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, விளையாட்டுத்துறையில் தொடர்ந்து அனைவரும் கவனிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக அரசிற்கு, மேலுமொரு வாய்ப்பாக இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து பாஜக தலைவர்கள் இன்னமும் பெரிய அளவில் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. அதேபோன்று, கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பிரதமர் வருவது குறித்தும் இன்னமும் விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், சனாதனம் தொடர்பாக எழுந்த பெரும் அதிர்வலைகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால், அரசியல் நோக்கர்களின் பார்வையில் பார்க்கும்போது, பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற நிதி ஒதுக்கீடு குழப்பங்கள் தொடர்பாக வெளியான சிஏஜி அறிக்கை பாஜக-விற்கு பின்னடவை தருவது போல் இருந்தது என அப்போது பேசப்பட்டது. அதுவும் 5 மாநிலத் தேர்தலில் எதிரொலிக்கும் என கருதப்பட்டது.
இந்தச்சூழலில்தான், சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியதை, 5 மாநில தேர்தலில் பாஜக பயன்படுத்திக் கொண்டது என பலர் சொல்வதையும் மறுக்க முடியாது. நீதிமன்றங்களில் வழக்குகள் கூட போடப்பட்டன. ஆனால், நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக காட்டாற்று வெள்ளம் போல், வட இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் பேசப்பட்ட சனாதனம் தொடர்பான பிரச்சினை, தற்போது மெலிந்து சிறு நீரோடையாகப் போய்விட்டது என்பது கண்கூடு.