அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் பிணை மறுத்த நீதிபதியை குற்றவாளி ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் வேகாஸ் நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையை தொடர்ந்து குற்றத்துக்கான தண்டனை அறிவிக்கப்படவிருந்தது. 


பிணை வழங்க மறுத்த நீதிபதி:


அப்போது, தனக்கு பிணை வழங்க வேண்டும் என குற்றவாளி தியோப்ரா ரெட்டன் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், அவர் மீது நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளை காரணம் காட்டி, கிளார்க் மாவட்ட நீதிபதி மேரி கே. ஹோல்தஸ், பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.


ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரு சில வினாடிகளில், நீதிபதி அமர்ந்திருந்த பெஞ்ச் மீது குற்றவாளி தியோப்ரா ரெட்டன் பாய்ந்தார். நீதிபதி மீது குற்றவாளி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், உதவி கேட்டு நீதிபதி கூச்சலிடுவதும் அழுவதும் பதிவாகியுள்ளது.


இச்சூழலில், பாதுகாவலர்களுடன் சேர்ந்த நீதிமன்ற மற்றும் சிறை அதிகாரிகள் நீதிபதியை காப்பாற்ற முயன்றனர். குற்றவாளி ரெட்டனை தாக்கி, இறுதியில் அவரை அழைத்து சென்றனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். நீதிபதியை தாக்கியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபபட்டன.


பாய்ந்து அடித்த குற்றவாளி:


சில காயங்களுடன் நீதிபதி  ஹோல்தஸ் உயிர் தப்பினார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தின்போது, நீதிமன்ற காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக நம்பப்படுகிறது.


நீதிபதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட கிளார்க் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஸ்டீவ் வொல்ப்சன், "கடவுளுக்கு நீதிபதி நன்றி உள்ளவராக இருப்பார். அவருக்கு உதவ வந்தவர்கள் குறிப்பாக அவரது பாதுகாவலர் மற்றும் அவரது எழுத்தருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். குற்றவாளி, வன்முறையாக நடந்து கொண்டார். 


 






பாதுகாவலர்கள் இல்லை என்றால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். பின்விளைவுகள் மோசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பாதுகாப்பான நீதிமன்ற வளாகததை பராமரிப்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. நாங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். நீதித்துறை, பொதுமக்கள் மற்றும் எங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.