Manipur Issue: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஒரு கடையில் பெண்ணிடம், ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டை உலுக்கிய சம்பவம்:


மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச்செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்துள்ளது.


வீடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கும் அரசின் செயலற்றதன்மைக்கும் கடுமையாகக் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த சம்பவம்  நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.


மீண்டும் கொடூரம்: 


இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.  அதன்படி, மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த பெண்ணிடம் அங்கு இருந்த ராணவ வீரம் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பந்தமான சிசிடிவி  காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


அதில், சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண் பொருட்கள் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் ராணுவ வீரர் ஒருவர் வந்து அந்த பெண்ணிடம் முதலில் பேச்சு வார்த்தை கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண்ணை கன்னத்திலும், உடம்பிலும் தொட்டு பேசியுள்ளார். அந்த பெண் விலகி செல்ல முயன்றபோது, அவரது கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.






இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஜூலை 20 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துணை ராணுவப் படைக்கு புகார் வந்ததையடுத்து, குற்றச்சாட்டப்பட்ட நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.