மணிப்பூரில் ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக வந்த நிலையில், அவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐந்து நாள்களுக்கு அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.


மணிப்பூரில் மீண்டும் பதற்றம்:


மணிப்பூர் இனக்கலவரமானது இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.


மாணவர்கள் - போலீஸ் இடையே மோதல்:


கடந்த சில மாதங்களாக ஒப்பீட்டளவில் அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில், மீண்டும் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம் இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.


இதையடுத்து, மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டம் காவல்துறை உடனான மோதலாக வெடித்தது. ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் இன்று ஊர்வலமாக வந்த நிலையில், அவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.


பொய்யான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பி வன்முறையை மேலும் தூண்ட விஷமிகள் சிலர் முயற்சிக்களாம் என கலவை எழுந்த நிலையில், ஐந்து நாள்களுக்கு அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணிப்பூர் அரசு வெளியிட்ட அறிக்கையில், "தேசவிரோத மற்றும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளை முறியடிக்கவும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும், பொது/தனியார் சொத்துக்களுக்கு உயிர் சேதம் அல்லது ஆபத்தை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.


எனவே, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் தவறான வதந்திகள் பரவுவதை நிறுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.