மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவை மறுசீரமைப்பதற்கான, குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.


அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு: இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019 முதல் 2024 வரை குழுவின் தலைவராக அமித் ஷா செயல்பட்டு வந்தார். தற்போது மீண்டும் அவரை ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் தமது நன்றியைத் தெரிவித்தார்.


பின்னர் பேசிய அமித் ஷா, "கடந்த 75 ஆண்டுகளாக அலுவல் மொழியை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறோம், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதன் முறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.


கே.எம். முன்ஷியும் என்.ஜி. ஐயங்காரும் பலருடன் கலந்தாலோசித்த பிறகு இந்தியை அலுவல் மொழியாக ஏற்கவும், அரசு பணிகளில் அதை ஊக்குவிக்கவும் எந்த உள்ளூர் மொழியுடனும் இந்தி போட்டியிடக் கூடாது என்றும் முடிவு செய்ததாக அவர் கூறினார்.


மோடி பிரதமரான பிறகு, கடந்த 10 ஆண்டுகளில், இந்தி அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் நட்பு மொழியாக மாற குழு தொடர்ந்து முயற்சி செய்துள்ளது என்றும், அது யாருடனும் போட்டியிடவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.


அமித் ஷா கூறியது என்ன? எந்த உள்ளூர் மொழியையும் பேசுபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒருமித்த கருத்து மற்றும் ஒப்புதலுடன் இந்தி பொதுவாக அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் மொழியில் நாட்டை ஆளுவது மிகவும் முக்கியமானது என்றும், இது தொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.


கல்வித் துறையுடன் இணைந்து உள்ளூர் மொழிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இந்தியில் சேர்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார். இந்தியில் கிடைக்காத பல சொற்களின் இணைச்சொற்கள் இருந்தன, ஆனால் பிற மொழிகளிலிருந்து பல சொற்களை ஏற்றுக்கொண்டதன் மூலம், நாம் இந்தியை வளப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதை நெகிழ்வானதாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்தக் குறிப்பிட்ட மொழிக்கும் இந்திக்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.