கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை நிகழ்ந்த ஆட்டோரிக்சா வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஷரீக், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக செயல்பட்டுள்ளார் என கர்நாடக காவல்துறை இன்று பகீர் தகவலை பகிர்ந்துள்ளது.


காவல்துறை இன்று பகிர்ந்துள்ள தகவல் வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் மூலம் அவரை பயங்கரவாதிகள் கையாண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து விரிவாக பேசியுள்ள கர்நாடக காவல்துறை தலைவர் அலோக் குமார், "ஷரீக், பலரால் இயக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கீழ் இயங்கி வந்த அல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பிற்காகவும் அவர் செயல்பட்டுள்ளார்.


அவருக்கு பயங்கி அளித்தவர் அராபத் அலி. இவர், இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அல் ஹிந்த் வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான முசாவிர் ஹுசைன் என்பவருடனும் ஷரீக் தொடர்பில் இருந்துள்ளார்.


ஷரீக்கை முக்கியமாக இயக்கி இருப்பவர் அப்துல் மதின் தாஹா. இன்னும், 2, 3 பேர் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஆனால், அவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை.


கர்நாடகாவில் அவர் வசித்து வந்த மங்களூரு உள்ளிட்ட ஐந்து இடங்களில் காவல்துறை சோதனை செய்து வருகிறது. மங்களூருவில் அவர் வசித்து வந்த வீட்டில் வெடுகுண்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


விசாரணை செய்வதற்காக நாங்கள் ஐந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரில் 4 இடங்களிலும், மங்களூருவில் ஒரு இடத்திலும் இன்று காலை சோதனை நடத்தப்பட்டது.


நேற்று இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எனவே, ஏழு இடங்களில் சோதனை செய்து சில மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.


கோவை குண்டுவெடிப்புக்கும் மங்களூரு ஆட்டோ வெடிப்புக்கும் என்ன தொடர்பு?


கோவையில் பொய்யான பெயரில் ஷரீக் சிம்கார்டை வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது அவரின் மொபைல் சிக்னல் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அவரது கூட்டாளிகளைக் கண்டறிய ஹரீக்கின் மொபைல் ஆராயப்பட்டு வருகிறது. 






வெடித்து சிதறல்:


முன்னதாக, இந்த வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட கர்நாடக டிஜிபி, "இது விபத்து இல்லை. பெரும் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல். இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார். வெடிந்த ஆட்டோரிக்ஷாவில் பேட்டரிகளுடன் எரிந்த பிரஷர் குக்கர் இருந்துள்ளது. அது தற்போது மீட்கப்பட்டது.