பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கசோவால் பகுதியில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சனிக்கிழமை இரவு, இந்திய எல்லை பகுதிக்குள் வந்த ஆளில்லா விமானம் மீது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அது பாகிஸ்தானுக்குத் திரும்பி சென்றது. பாதுகாப்பு படை வீரர்கள், ட்ரோனை நோக்கி குறைந்தது 96 முறை சுட்டனர்.


அதன் மீது ஐந்து குண்டுகளை வீசினர். அந்த ஆளில்லா விமானம் எங்கே சென்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபடுவது மட்டும் இன்றி ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இதையடுத்து, அதை சுட்டு வீழ்த்த இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ட்ரோன்களின் வருகையை முன்கூட்டியே கண்டறிந்து செயலிழக்க செய்யும், ஜாமர் கருவி மற்றும் அதை சுட்டு வீழ்த்த துப்பாக்கிகளுடன் அடங்கிய நவீன கருவிகளை எல்லையில் நிறுவி உள்ளது.


 






இங்கு, வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து 191 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.


இதில், 171 ட்ரோன்கள் பஞ்சாப் பகுதிக்குள்ளும், 20 ட்ரோன்கள் ஜம்மு பகுதியிலும் நுழைந்திருக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை இந்த ட்ரோன்கள் மூலமாகதான் கடத்தப்படுகின்றன.


இந்த கடத்தலின் மூலம் வரும் பணம், பயங்கரவாத நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அத்துமீறல்களை தடுக்க, இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 'குவாட்காப்டர் ஜாமர்' எனப்படும் ட்ரோன்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவியை ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தி உள்ளது. 


சமீப காலமாகவே, ட்ரோன் வாயிலாக நடத்தப்படும் பயங்கரவாதி செயல்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்தியாவில் மட்டும் இன்றி, உலகம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளது.


சமீபத்தில், கிழக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்ப்பு போராளிகளால் நடத்தப்படும் ராணுவ தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், எந்த வித உயிர்சேதமும் நிகழவில்லை என்றும் பொருள்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.