கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று நிகழ்ந்த ஆட்டோரிக்சா வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக கருதப்படுபவர் வசித்து வந்த வீட்டில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், குண்டுவெடிப்பு தடுப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு குண்டுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஷரீக், கடந்த மாதம்தான், ஒரு அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.


ஆட்டோ வெடிப்பு:


மொபைலை சரி செய்வதை கற்று கொள்ளும் பயிற்சிக்காக மைசூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். இதற்கு மத்தியில், ஆட்டோவில் இருந்து ஒரு ஆதார் கைப்பற்றப்பட்டது. ஆனால், அது ரயில் ஊழியர் ஒருவரின் ஆதார் அட்டை என்பது பின்னர் தெரிய வந்தது.


கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிரேம்ராஜ் ஹுதாகி என்ற ரயில்வே ஊழியரின் அடையாள அட்டையைதான் ஷரீக் திருடியுள்ளார். 


கோவையில் வாங்கிய சிம்கார்டு:


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கோவையில் பொய்யான பெயரில் சிம்கார்டை வாங்கியுள்ளார் ஷரீக். அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது அவரின் மொபைல் சிக்னல் வழியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அவரது கூட்டாளிகளைக் கண்டறிய ஹரீக்கின் மொபைல் ஆராயப்பட்டு வருகிறது" என்றார். வெடிந்த ஆட்டோரிக்சாவில் பேட்டரிகளுடன் எரிந்த பிரஷர் குக்கர் இருந்துள்ளது. அது தற்போது மீட்கப்பட்டது.


வெடித்து சிதறல்:


முன்னதாக, இந்த வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட கர்நாடக டிஜிபி, "இது விபத்து இல்லை. பெரும் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல். இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார்.


மங்களூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகே உள்ள சாலையில் வந்து நின்ற ஆட்டோரிக்சா வெடித்துச் சிதறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 


சமீபத்தில், தமிழ்நாட்டில் கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


இதனிடையே, காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. 


கோவை சம்பவம்:


பின்னர், காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. 


கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் நடத்திய விசாரணையில்தான், இது தற்கொலை படை தாக்குதல் என்பது தெரிய வந்தது.