சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.


தங்க அங்கி அணிவிக்கும் பூஜை


கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர், அதனை தொடர்ந்து திரளான பகிகர்கள் கூட்டம் ஐயப்பனை தரிசித்த வண்ணம் உள்ளனர். கேரளா தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, மற்றும் வட இந்தியாவில் இருந்து வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவடைந்ததை ஒட்டி நேற்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் பூஜை நடைபெற்றது. 



ஆரன்முளாவில் இருந்து வந்த தங்க அங்கி


தங்க அங்கி அணிவிக்கும் பூஜையில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23 ஆம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சன்னிதானத்தை வந்து அடைந்தது. அதனை 18 ஆம் படி வழியாக எடுத்து சென்று அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்: Pongal Gift Token: பொங்கல் பரிசு தொகுப்புக்கு டிசம்பர்.30 முதல் டோக்கன் விநியோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..


மண்டல பூஜை


மீண்டும் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, களபாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை நடைபெற்ற போது மேள தாளங்கள் முழங்க, மணியோசை சபரிமலையெங்கும் எதிரொலிக்க, அங்கு திரண்டி வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'சுவாமியே சரணம் அய்யப்பா', என்று சரணகோஷம் எழுப்பி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.



பரவசமடைந்த பக்தர்கள்


அதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்த பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். தங்க அங்கி அணிந்து அலங்கார தீப வெளிச்சத்தில் ஜொலித்த அய்யப்பனின் திருவுருவத்தை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். பிற்பகல் 1.30 மணி வரை தங்க அங்கி அணிந்த ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மண்டல பூஜைக்காக பகல் 1.30 மணிக்கு அடைக்கப்பட்ட கோவில் நடையை, மாலை 5 மணிக்குதான் மீண்டும் திறந்தனர். அய்யப்பனுக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு, 'அரிவராசனம்' பாடல் ஒலிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். மண்டல பூஜையை ஒட்டி நேற்று சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.