விபத்தில் தனது ஒரு கையை இழந்த ட்ராக்டர் ஓட்டுநர் ஒருவர்  வெள்ளம் சூழ்ந்திருந்த கிராமத்தில் இருந்த 3 கர்ப்பிணி பெண்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 


உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. சாலை துண்டிக்கப்பட்டு ஒவ்வொரு கிராமமுமே தனித்தீவாய் இருக்கிறது. ராம் கங்கா ஆற்றின் அருகே அமைந்துள்ளது குனியா கிராமம். இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமன், ஷியாமா ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 24ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் நரேஷ் என்பவர் உதவிக் கரங்களை நீட்டியுள்ளார் ஒரு கரம் இல்லாமலேயே. நரேஷ் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். விபத்தின் காரணமாக தனது ஒரு கையை இழந்துவிட்டார். இந்நிலையில் கிராமத்தில் டிராக்டர்களை ஓட்டி வந்தார். 


இந்நிலையில் வெள்ளத்தின்போது பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு உதவியுள்ளார். ட்ராகட்ரின் பின் புறத்தில் பெண்களை அமரவைத்துவிட்டு ட்ராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் பாதி வழியில் செல்லும்போது டிராக்டர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. ஆனாலும் சூழலை சரியாக சமாளித்து ஒரு கையால் துணிச்சலாக டிராக்டரை ஓட்டிக் கொண்டு அந்தப் பெண்களை சரியான நேரத்தில் மிர்சாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 




அதேபோன்ற சம்பவம் அக்டோபர் 25ஆம் தேதி அருகேயுள்ள அட்டா கிராமத்திலும் அரங்கேறியது. அப்போதும் பிரசவ வலி ஏற்பட்ட கோமதி என்ற அந்தப் பெண்ணைத் தன் டிராக்டரில் அமர வைத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளார் நரேஷ். தற்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தைப் பிறந்துள்ளது. 


மூன்று பெண்களும் குழந்தைகளுக்கும் நல்ல படியாக குழந்தைப் பிறந்ததாக மிர்சாபூர் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் ஆதேஷ் ரஸ்தோகி தெரிவித்துள்ளார். கோமதிக்கு ஆண் குழந்தையும் மற்ற இருவருக்கும் பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம், பேசிய சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் சௌரப் பட்,  நரேஷின் செயல்கள் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அவர்  செய்த உதவியைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு உரிய அரசு திட்டங்களின் பலன்களை கிடைக்கவும், நரேஷின் முன்மாதிரியான பணிக்காக அவரை கவுரவிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண