Anbumani Ramadoss PMK: பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.
முகுந்தன் ராஜினாமா:
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. இந்த பிரச்னைக்கு பிரதான காரணமாக கருதப்படுவது, குடும்ப உறுப்பினரான முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை வழங்கியதாகும். இந்நிலையில் தான், பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதகாவும், அன்புமணி தான் எங்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து கட்சியில் செயல்படுவேன் எனவும் முகுந்தன் விளக்கமளித்துள்ளார்.
முகுந்தன் அறிவிப்பு
முகுந்தன் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் ஷாக்:
கடந்தாண்டு புதுச்சேரி பொதுக்குழுவில் வைத்து முகுந்தனை, பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். அப்போது, அதே நிகழ்விலேயே இந்த நியமனத்திற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஏற்கனவே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே இருந்த மோதல் மேலும் வலுவடைந்தது. அதன் நீட்சியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த செய்தியாளர் சந்திப்பு நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ராஜினாமாவை அறிவித்துள்ள முகுந்தன், இனி எங்களின் எதிர்காலம் அன்புமணியே எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், ராமதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு, அவர் கட்சியில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உடைந்ததா பாமக?
முகுந்தன் நியமனம், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என அனைத்து விவகாரங்களிலும் தனது நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவுகளையே அன்புமணி எடுத்துள்ளார் என்பதை ராமதாஸே வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். இந்நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக முகுந்தன் ராஜினாமாவை அறிவித்துள்ளார். இதனால் பாமக கட்சியானது மூத்த தலைவர்கள் அடங்கிய ராமதாஸ் அணி, இளம் தலைவர்கள் அடங்கிய அன்புமணி அணி என இரண்டாக உடைந்துள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.