விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே புதுக்குப்பம் மற்றும் அனிச்சங்குப்பம் மீன் இறங்குதளம் முதலவர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, திருவொற்றியூரிலிருந்து, காணொளி காட்சி வாயிலாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில், புதுக்குப்பம் - அனிச்சங்குப்பம், முதலியார்குப்பம் - செட்டிநகர் ஆகிய இடங்களில் 2 மீன் இறங்கு தளங்களை திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்.,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளும் முதன்மைத்துறைகளாக விளங்கிடும் வகையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, திருவொற்றியூரிலிருந்து காணொளி காட்சி வாயிலாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணை என 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். மேலும், தமிழ்நாடு மாநிலத்தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும்
அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், புதுக்குப்பம் - அனிச்சங்குப்பம், முதலியார்குப்பம் - செட்டிநகர் ஆகிய இடங்களில் 2 மீன் இறங்கு தளங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதுக்குப்பம் மற்றும் அனிச்சங்குப்பம் பகுதியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ், ரூ.7.0 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், புதுக்குப்பத்தில் 1- மீன்வலை பின்னும் கூடம், 1- மீன் ஏலக்கூடம், 2-மீன் உலர்த்தும் தளம், உட்புற சாலை வசதி,1- உயர்மின் கோபுரவிளக்கு வசதிகளும், அனிச்சங்குப்பம் பகுதியில், 1- மீன் வலை பின்னும் கூடம், 1 - மீன் ஏலக்கூடம், 2- மீன் உலர்த்தும் தளம், உட்புற சாலை வசதி, 1-உயர்கோபுர மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், நிறைந்தது மனம் நிகழ்வில், இப்பகுதினைச் சேர்ந்த மீனவ மக்களான கோவிந்தன், மனோகரன் மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் தெரிவிக்கின்றபொழுது, மீனவ மக்களின் எண்ணங்களை அறிந்து இப்பகுதியில் மீன் இறங்குதளம் அமைத்துக்கொடுத்ததன் வாயிலாக, நாள்தோறும் சிரமமின்றி பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்திட ஏதுவாக இருக்கும். மேலும், வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடற்கரையொட்டிய திறந்தவெளி பகுதிகளிலேயே மீன்பிடி வலை பின்னும் வேலை மேற்கொண்டு வந்தோம்.
தற்பொழுது தனியாக மீன்பிடி வலைகள் பின்னுவதற்கென்று பின்னல் கூடம் அமைத்துக்கொடுத்துள்ளதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி வலை பின்னும் வேலைகளில் ஈடுபடுவோம். இதுமட்டுமல்லாமல், பிடித்து வரும் மீன்களை வாங்கிச்சென்று விற்பனை செய்வதற்கு அதிகளவில் பெண்களே வருகை புரிவதால் அவர்களின் நிலை அறிந்து பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திடும் எனவும், அணுகு சாலை மற்றும் உயர்கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களிலும் மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியும் என தெரிவித்ததுடன், இத்திட்டத்தின் வாயிலாக தங்கள் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும், இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைத்து மீனவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
தற்பொழுது புதுக்குப்பம் மற்றும் அனிச்சங்குப்பம் பகுதியில், 101 விசைப்படகுகள் மூலம், 2000-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தினை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, மீன்பிடி தொழிலை சிறப்பாக மேற்கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.