சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை திருப்பிப்போட்டது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 


இந்தியாவை பொறுத்தவரையில், முதல் அலை மற்றும் மூன்றாவது அலையை காட்டிலும் இரண்டாவது அலை பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது. மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். 


மருத்துவமனைகளில் தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறியது. இந்த மாதிரியாக, பல்வேறு தரப்பினரின் வாழ்க்கையில் கொரோனா மறக்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாதிரி சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.


மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி:


தார் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த நபர், தற்போது தனது வீட்டுக்கு திரும்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரின் குடும்ப உறுப்பினர்களே அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.


உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் பெயர் கமலேஷ் பட்டிடார். இவருக்கு வயது 35. இவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேற்று அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்பட்டு, இறுதி சடங்கு செய்யப்பட்ட கமலேஷ், நேற்று காலை 6 மணி அளவில் கரோட்கலா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி அத்தை வீட்டின் கதவை தட்டியுள்ளார்.


இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிய நபர்:


இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ள கமலேஷின் உறவினர் முகேஷ், "இரண்டாவது கோவிட்-19 அலையின் போது கமலேஷ்  நோய்வாய்ப்பட்டார். பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.


மருத்துவமனை அவர்களிடம் உடலை ஒப்படைத்த பிறகு, அவரது இறுதி சடங்குகளை குடும்பத்தினர் செய்தனர். இப்போது, ​​அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த காலகட்டத்தில் அவர் எங்கு தங்கினார் என்பது குறித்து அவர் எதையும் சொல்லவில்லை" என்றார்.


இதுகுறித்து கன்வான் காவல் நிலையப் பொறுப்பாளர் ராம் சிங் ரத்தோர் கூறுகையில், "குடும்ப உறுப்பினர்கள் சொன்ன தகவலின்படி, கமலேஷ், 2021இல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். வதோதராவில் (குஜராத்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 


இதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் வதோதராவில் உள்ள மருத்துவமனையால் வழங்கப்பட்ட உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து பின்னர் தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர். சனிக்கிழமை வீடு திரும்பியபோது அவர் உயிருடன் இருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. கமலேஷிடம் வாக்குமூலம் பெற்ற என்ன நடந்தது என்பது தெரிய வரும்" என்றார்.