குடிபோதையையில் தலை, கால் புரியாமல் நடந்து கொள்வது, சாலைகளில் செல்வோரிடம் தகராறு செய்வது இவற்றின் வரிசையில் மலைப்பாம்பு ஒன்றை வம்பிழுத்து வசமாக சிக்கிய நபர் இணையத்தில் வைரலாகியுள்ளார்.


ஜார்க்கண்ட் மாநிலம், கார்வா கிதசோட் கிராமத்தைச் சேர்ந்த பிர்ஜலால் ராம் எனும் இந்நபர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.


பெரும்பாலான நாள்களில் குடித்துவிட்டு வந்து அக்கம்பக்கத்தினரை வம்பிழுப்பதை வாடிக்கையாக இவர் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், முன்னதாக வழக்கம்போல் மது அருந்திவிட்டு இந்நபர் மீன்பிடிக்கச் சென்றதாகவும், அப்போது அவ்வழியே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை எடுத்து போதையில் தனது கழுத்தில் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், சீற்றமடைந்த மலைப்பாம்பு அவரது கழுத்தை இறுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, பாம்பிடமிருந்து விடுபட ராம் எவ்வளவோ போராடியும் முடியாத நிலையில், உடன் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.


 






தொடர்ந்து, ராமின் மகனும் அவரது நண்பர்களும் விரைந்து வந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவரது கழுத்தை இறுக்கிய பாம்பை அகற்றினர். 


இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக ராம் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தப்பிய நிலையில், அவரது மகனின் நண்பர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


முன்னதாக இதே போல் மலைப்பாம்பு ஒன்று, ஒரு முழு மானை வெகு சில நொடிகளில் விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலானது.


 






மானை விழுங்கும் மலைப்பாம்பின் வயிற்றை அருகில் நிற்கும் நபர்கள் தட்டிக் கொடுத்து உதவுவதும் (?!) இந்த வீடியோவில் பதிவான நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலானது.