தமிழ்நாட்டு பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று தெலுங்கானாவில் நடந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
3 கிலோ திட்டுக்கள் :
இந்தநிலையில், தெலுங்கானா பேகம்பட்டில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடியின் பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “அரசியல் என்பது சேவையை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். ஆனால், தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளவர்கள், என்னை திட்டுவதையே முக்கிய அரசியல் பணியாக செய்து வருகின்றனர். இதற்காகவே அவர்களின் முழு சக்திகளையும் பயன்படுத்துகின்றனர். கடந்த இரண்டு நாட்களில், நான் புதுடெல்லியில் இருந்து கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா சென்று இங்கு வந்துள்ளேன்.
இதன் காரணமாக, ஒரு சிலர் என்னிடம் ‘நீங்கள் எப்போதும் சோர்வடைய மாட்டீர்களா..?” என பலரும் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். நான் தினமும் 2 முதல் 3 கிலோ வரை திட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த திட்டுகள், விமர்சனங்கள், கேலிகளை ஊட்டச்சத்தாக மாற்றும் ஆசியை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார்.
மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்கு தேவையான சக்தியை இவை வழங்குகின்றன. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற பல ஊட்டச்சத்துகளை நான் பெற்று வருகிறேன். ஏமாற்றம், பயத்தால் சிலர் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்காக அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி சோர்ந்துவிட்டார்கள்.
கவலை வேண்டாம் :
என்னை யார் விமர்சித்தாலும் கட்சியினர், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களை பார்த்து சிரித்திவிட்டு நம்முரைய பணிகளை செய்வோம். அவர்கள் திட்டுகளால் பாஜக கட்சி வளர்கிறது. நம் சின்னமான தாமரையும் வளர்ந்து வருகிறது. இதை பார்த்து நம் அனைவரும் மகிழ்வோம்.
என்னை நன்றாக திட்டுங்கள், அவற்றை நான் செரித்து விடுவேன். பாஜகவை திட்டுங்கள், அதனால் கட்சி நன்றாக வளரும். அதே நேரத்தில், தெலுங்கானா மக்களை அவமதித்தால் அதை ஏற்க மாட்டேன். இதற்கான பதிலடி நிச்சயம் கிடைக்கும்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு
தெலுங்காவின் பெயரை சொல்லி வளர்ந்தவர்கள், மக்களின் முதுகில் குத்திவிட்டனர். இங்கு ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சி பெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும்.
சமீபத்தில் இங்கு நடந்த முனுக்கோடா சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் அதற்கு முன் நடந்த இடைத்தேர்தல்கள், மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதை காட்டுகின்றன. ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர்.” என்று தெரிவித்தார்.