உலகம் முழுவதும் கடந்தாண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரசினால் தினமும் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 




ஆனால் இந்த பாதிப்பின் வேகம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த காலக்கட்டத்தில், வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள கபசுரக்குடிநீர், ஆவி பிடிப்பது, சத்தான உணவுகளை உட்கொள்வது, தனித்து இருப்பது போன்ற முறைகளை மக்கள் பரவலாக கடைப்பிடித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றாலும் இதனைத்தான் மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது மட்டுமே ஆக்சிஜன் செலுத்தக்கூடிய நிலை ஏற்படுகிறது. 


இதனைப்பற்றி எல்லாம் தினமும் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஆனால் இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் அதனையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் கொரோனாவிற்கு விதவிதமாக தவறான சிகிச்சை முறைகளை கையாளத் தொடங்கி விட்டனர். ஆவி பிடிப்பது என்பது நிவாரணம் தரும் என்பது சரிதான். ஆனால் அதற்கு மக்கள் மேற்கொள்ளும் முறைகள்தான் பார்ப்போரை நகைக்க செய்கிறது. அப்படி தான் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து அவரை பாதுகாக்க புதுவிதமாக ஆவி பிடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.



 


சாதாரணமாக தண்ணீரை சூடு செய்து அதில் ஆவி பிடிப்பதற்கான மாத்திரை மற்றும் மூலிகைச் செடிகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா? அடுப்பில் உள்ள  குக்கரில் டியூபை சொருகி, மறுபுறம் புனல் ஒன்றை வைத்து நின்றுகொண்டே குக்கர் பிரசரில் வரும் ஆவியினை பிடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை குக்கர் பிரசர் தாங்காமல் வெடித்துவிடும் என்ற அச்சம் கூட இல்லாமல், இப்படி ஒரு மூட நம்பிக்கையோடு ஆவி பிடிக்கும் காட்சிகள் பார்ப்போரை நகைக்க வைக்கிறது. 


இந்த வீடியோவினை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்துவருகின்றனர். கொரோனாவினை ஒழிப்பதற்கு மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மட்டுமின்றி இதற்கான தடுப்பூசிகளையும் விரைந்து மக்களுக்கு செலுத்தி கொரோனா இல்லாத நாட்டினை உருவாக்க முயலவேண்டும்.