சென்னையில் தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ராஜகோபால் என்பவர் ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் இன்று தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பலர் நடவடிக்கை தேவை என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என்னுடைய பள்ளி நாட்களில் நானே அது போன்ற பாதிப்புகளை சந்தித்துள்ளேன் என புயலை கிளப்பி இருக்கிறார் நடிகை கவுரி கிஷன். இவர் 96 படம் மூலம் தமிழகத்தில் அறிமுகமாகி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அடையாறு பள்ளியில் தான் பயின்ற காலத்தில் தனக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதாக நடிகை கவுரி கிஷன் மனம் திறந்துள்ளார்.
அடையார் பள்ளியில் படித்தபோது "ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவது, சாதியை சுட்டிக் காட்டுவது, அதை வைத்து மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, நம்முடைய கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற கொடுமைகளை தானும், தன்னோடு சேர்ந்து சக மாணவர்களும் எதிர்கொண்டுள்ளோம்" என கவுரி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றும் அப்பள்ளியில் அதே சூழல் நீடித்தால், பிரச்சனைகளை சந்திக்கும் மாணவர்கள் தயங்காமல் அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். மேலும் அது போன்ற புகார்களை மாணவர்கள் தெரிவித்தால், அவர்களின் பெயரை வெளியே சொல்லாமல், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்வேன் என்றும் கூறியுள்ளார்.