கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நபர் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் குறைந்த பயண நேரம், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிப்பார்கள். ரயில்வே துறை சார்பில் பயணிகளின் வசதிக்கேற்ப பொதுப்பெட்டி, படுக்கை வசதிக் கொண்ட பெட்டி, ஏசி பெட்டிகள் என பல வகைகளைக் கொண்ட ரயில்களை இயக்கி வருகிறது. இந்த பயணங்களின் போது அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதனை தடுக்க ஓடும் ரயிலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ வைத்த நபர்
இப்படியான நிலையில் கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள
ஆலப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது வியாழக்கிழமை, சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயங்குகிறது. மதியம் 2.55 மணியளவில் ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.55 மணியளவில் தான் கண்ணூர் சென்றடையும். இப்படியான நிலையில் வழக்கம்போல அந்த ரயில் நேற்று ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த ரயில் இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறியுள்ளார். கோழிக்கோடு மற்றும் க்யூலாண்டி ரயில் நிலையங்களுக்கு நடுவே கோரபுழா ரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் ரயில் சென்றபோது அந்த நபர் யாரும் எதிர்பாராத வகையில் சக பயணிகள் மீது திரவம் ஒன்றை தெளித்து தீ வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் ரயிலில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சரி செய்தபோது 3 பேர் காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக ரயில் வந்த பாதையில் தேடிய போது ஒரு ஆண், பெண், குழந்தையின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தீவிர விசாரணையில் போலீசார்
உடனடியாக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு அதிகாலையில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த ஒன்றாக போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி பைக் ஒன்றில் ஏறிச் சென்றதாக பயணி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார். அந்த நபர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த பைக் கோழிக்கோடு கூராச்சுண்டை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் இலத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேட்பாரற்று பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல் பாட்டில், துண்டு பிரசுரம், மொபைல் ஃபோன், துணி ஆகிய பொருட்கள் இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மாநில டிஜிபி திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.