கோழிக்கோடு எலத்தூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் உயிரிழந்த தீ விபத்து திட்டமிட்டு நடந்ததாக காவல்துறையினர் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர், பைக்கில் தப்பி சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இலத்தூர் காட்டு பகுதியில் இறங்கிய மர்ம நபர், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பைக்கில் ஏறி தப்பி சென்றதாக, நேரில் கண்ட சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது, இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் தெரியவில்லை.
கேரள காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தை ஏற்படுத்திய நபர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், முன்பதிவு எதுவும் செய்யாமலும், பயணச்சீட்டு எதுவும் இல்லாமல் பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
என்ன நடந்தது..?
கேரள மாநிலம் ஆழப்புழா ரயில் நிலையத்தில் இருந்து கண்ணூர் வரை செல்லும் ரயில் நேற்று இரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சென்றபோது டி1 பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஏறியுள்ளார். அப்போது ஏறிய நபருக்கும் அங்கிருந்த பயணி ஒருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை சக பயணியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதை பார்த்த மற்ற பயணிகள் தீயை அணைக்க முயன்றதில் தீக்காயம் அடைந்தனர்.
அந்த நேரத்தில், பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி பயணிகளின் ஆடைகள் மற்றும் இருக்கைகளை எரிக்க தொடங்கியது. இதனால், ரயிலில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சத்தம் கேட்டு பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்தபோது, எலத்தூரில் உள்ள கோரபுழா ஆற்றுக்கு மேலே டி1 பெட்டி இருந்தது. ரயில் வேகம் குறைந்தவுடன் காயம் பட்ட சில பேர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தை ஏற்படுத்திய அந்த மர்ம நபர் ரயில் நின்றதும் இறங்கி தப்பி சென்றுள்ளார்.
பயத்தில் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் நான்கு பெட்டிகளின் அவசர சங்கிலியை இழுத்து, தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இரவு 11.45 மணியளவில் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் டி1 பெட்டிக்கு பாதுகாப்புப் படையினர் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 3 உயிரிழந்துள்ளதாகவும், 9 பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.