உத்தரகாண்ட் மாநிலத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற நபர் உறவினர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  நவம்பர் 5ம் தேதி இரவு தான் தங்கியிருந்த அறையில் தீப்பிடித்த காயத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் குணால் பண்டிர் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  இதனால் அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சோனு சவுகான் என்ற 40 வயது நபர் தனது மருமகனான குணால் பண்டிரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில் இருந்து ஹரித்வார் வந்துள்ளார்.

இந்த நிலையில் குணால் பண்டிரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தபோது குடும்பத்தினர் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சோனு சவுகானை அவரது மைத்துனரின் மகனான நமன் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றார். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. துக்க வீட்டில் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து சோனு சவுகானின் சகோதரி கங்காநகர் காவல் நிலையத்தில் பவன் மீது புகார் அளித்தார். இதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஹரித்வார் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பிரமோத் சிங் தோவல் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயன்ற ரூர்க்கியின் மேற்கு அம்பர் தலாப் பகுதியைச் சேர்ந்த பவனை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதற்கிடையில் பவனிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்றது. அப்போது  தனக்கும் சோனு சவுகானுக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன். 

அதன்படி குணால் பண்டிர் இறப்புக்கு வந்திருந்த அவரை கொலை செய்ய இதுதான் தக்க தருணம் என முடிவு செய்து வம்பிழுத்து தகராறு செய்தேன். பின்னர் மறைத்து வைத்த கத்தியால் குத்தினேன் என கூறியதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும், கொலையில் வேறு யாருக்கேனும் சம்பந்தம் இருக்கிறதா என்ற ரீதியிலும் ஆராயப் படுவதாக பிரமோத் சிங் தோவல் தெரிவித்துள்ளார். 

மேலும் குணால் பண்டிரும் சந்தேகமான முறையில் இறந்துள்ளார், அவரது இறுதி சடங்கில் நடைபெற்ற கொலை ஆகிய இரண்டும் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.