பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, பணியில் இருந்து நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எச்சரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு குறித்து முழு விவரங்களை காணலாம்.
“நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள்“
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமான வாக்குகள் பதிவானது. இதனால், தற்போது அனைத்து கட்சிகளின் கவனமும், 2-ம் கட்ட வாக்குப்பதிவை நோக்கி நகர்ந்துள்ளது. வரும் 11-ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில், ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
இந் நிலையில், ரெகா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “ஞானேஷ்குமார், நீங்கள் நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. பொதுமக்களே, ஞானேஷ்குமார் என்ற இந்த பெயரை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள்“ என்று கூறினார். மேலும், ஹரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார் பிரியங்கா.
பின்னர், பிரசாத்தின் போது, தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமாருடன் பணியாற்றும் எஸ்.எஸ். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்ட பிரியங்கா, அவர்களது பெயர்களையும் மறந்துவிடாதீர்கள் என்று மக்களிடம் கூறினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குத் திருட்டு குறித்து இன்று தேர்தல் ஆணையத்தை இணைத்து ராகுலும் உரை
முன்னதாக, இன்று பீகாரில் உள்ள பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள் என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து, அரியானா தேர்தலை திருடிவிட்டனர் என்பதை மக்களுக்கு உறுதியாக சொல்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதோடு, மக்களவை தேர்தலில், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் வாக்குகளை திருடியதாக ஆதாரங்களுடன் தாங்கள் கூறியதாக சுட்டிக்காட்டினார். அதேபோல், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், கடைசி தருணம் வரை தங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை என்றும் கூறினார். மேலும், பீகார் ஜென் Z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், அவரது சகோதரி பிரியங்காவும் தேர்தல் ஆணையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.