சமீப காலமாகவே, தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வந்துள்ளது. தெருக்களில் நடைபயற்சிக்கு செல்வோரை, சாலையில் நடந்து செல்வோரை தெரு நாய்கள் கடித்து குதறும் சம்பவம் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கொடூர சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசித்தில் நடந்துள்ளது.


தெருநாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம்:


அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று தெருநாய்கள் சேர்ந்து ஒருவரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்களால் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பல்கலைக்கழகம் அமைந்துள்ள அந்த பகுதியில் வசித்து வருபவர் சப்தர் அலி.


இவர், சர் சையத் அருங்காட்சியகத்தில் உள்ள தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது நாய்கள் அவரைத் தாக்கின. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் குணாவத் கூறுகையில், "தகவல் அறிந்த போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஆனால், அதற்குள் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார்.


சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழகம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


ஒரு புறம் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பிட்புல் நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.


விட்டு வைக்காத செல்லப்பிராணி:


மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஆக்ரோஷமாக காணப்படும் இந்த பிட்புல் நாய்கள் பார்ப்பதற்கு மிகுந்த அச்சுறுத்தலான தோற்றத்துடன் காணப்படும். சமீபத்தில், ஹரியானாவில் பிட்புல் நாய் கடித்து குதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.


பிஜ்னா கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ளவர் வளர்த்து வந்த பிட்புல் நாய் இந்த இளைஞரை பார்த்து குரைத்துள்ளது. பிட்புல் நாய் குரைப்பதை கண்டு பயந்து போன அந்த இளைஞர் தப்பித்து ஓடியுள்ளார்.


 






ஆனால், அந்த பிட்புல் நாய் அந்த இளைஞரை விடாமல் துரத்திச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்தது. அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பை கவ்விப்பிடித்த பிட்புல் நாய் சரமாரியாக கடித்தது. இதில், அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.


கடந்த 7ஆம் தேதி பிட்புல் நாய் தாக்கியதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாட்டில் சமீபகாலமாக பிட்புல் நாய்களின் தாக்குதல் சம்பவத்தால் மனிதர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை அதிகரித்து வருவது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.