நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில், இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 


காலியாகும் 68 மாநிலங்களவை இடங்கள்:


இரண்டாவது மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 
250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.


இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 9 மத்திய அமைச்சர்கள் அடங்குவர். டெல்லியில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், நரேன் தாஸ் குப்தா, சுஷில் குமார் குப்தா ஆகியோரின் பதவிக்காலம் ஜனவரி 27ஆம் தேதி முடிவடைய உள்ளது. 


சிக்கிமில் உள்ள ஒரே மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலமும் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த ஹிஷே லச்சுங்பா, மாநிலங்களவை உறுப்பினராக ஓய்வு பெறுகிறார். 


பதவிக்காலம் முடிவடையும் மாநிலங்களவை உறுப்பினர்கள்:


ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 57 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது.


உத்தர பிரதேசத்தில் மட்டும் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பிகாரில் 6 இடங்களுக்கான பதவிக்காலமும் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கான பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கான பதவிக்காலமும் ஒடிசா, தெலங்கானா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா மூன்று இடங்களுக்கான பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. 


ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தலா இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் இந்தாண்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம், நான்கு நியமன மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது.


மகாராஷ்டிாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் உறுப்பினர் குமார் கேட்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வந்தனா சவான், சிவசேனா (உத்தவ் தாக்கரே) உறுப்பினர் அனில் தேசாய் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.