30 வயதை கடந்தும் பல இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மீம் கிரியேட்டர்களாகவும், யூட்டியூபார்களாகவும், வாழ்ந்துவரும் பட்சத்தில், திருமணமாகாத ஏக்கத்துடன் இன்ஜினியரிங் படித்து வேலையில் இருந்தும் ஏக்கத்துடன் பலர் தவித்திருக்கும் நிலையில், 25 வயது பெண் ஒருவர், 65 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்த சம்பவம் பல ஆண்களை பொறாமை கொள்ள வைத்திருக்கிறது. 90களில் பிறந்த இளஞர்கள் பலர் கல்விக்கடன், குடும்ப பாரம், சொந்த வீடு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 30 வயதை தாண்டியும், தங்களுக்கான மனைவியை கரம் பிடிக்க இயலாமல் தவ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதில் பலரும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்த மேகனா என்ற வயது 25 பெண் 65 வயதான சங்கரண்ணாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளார்.



மேகனாவுக்கும், வேறு ஒரு இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் எங்கோ மாயமாகி விட்டார். தலைமறைவான அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையோ அல்லது தேடவே இல்லையோ அவர் மேகனாவின் கண்களில் படவில்லை. இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மேகனா வேறு திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இந்த நேரத்தில்தான் மேகனாவுக்கு, சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் 65 வயதான சங்கரண்ணா மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த சங்கரண்ணாவிடம் காதலை தெரிவித்த மேகனா, சங்கரண்ணாவை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பேரன் பேத்தி எடுத்த மூத்த குடிமரான சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்து இந்த புதிய காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. இதற்கு பின்னர் மேகனா செய்த காரியம் தான் திருமணமாகாத முரட்டு சிங்கிள்களை உரசிப்பார்த்துள்ளது. இருவரும் கழுத்தில் மலர் மாலையோடு ஜோடியாக இருக்கும் திருமண புகைப்படங்களை முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவின் காதலுக்கு ஆதரவாகவும், முதியவரின் வயது மீறிய காதல் திருமணத்துக்கு எதிராகவும் பொங்கி வருகின்றனர்.  சிலர் "சங்கரண்ணா இது ரொம்ப, ரொம்ப தப்புங்கண்ணா" என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில் வயதில் என்ன இருக்கிறது, மனங்கள் இணைவதில் என்று சிலர் திருமண ஜோடியை வாழ்த்தியும் வருகின்றனர்.