சமோசா கடையில் ஸ்பூன் தராததால் ஆத்திரமடைந்த நபர், முதலமைச்சர் உதவி எண்ணில் புகார் அளித்துள்ள சம்பவம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமோசாக்கள் நம் ஊர் மக்களின் விருப்பமான சாட் உணவு வகைகளில் ஒன்று. வட இந்தியாவில் இன்னும் பிரசித்தம்.
வட இந்திய மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் காலைவேளைகளை ’கரம் கரம் சமோசா’ எனப்படும் சூடான சமோசாக்களுடன் தொடங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக மத்தியப் பிரதேசத்தின் பிரதான காலை உணவான போஹா, கச்சோரி ஆகிய உணவுகளுடன் சமோசாக்களும் முக்கிய இடம்பெற்றுள்ளன.
அப்படி மத்தியப் பிரதேசத்தில் தன் காலையைத் தொடங்கிய நபர் ஒருவர் சிறு அதிருப்தி காரணமாக சமோசா கடை மீது அளித்துள்ள வித்தியாசமான புகார் கவனம் ஈர்த்துள்ளது.
அம்மாநிலத்தில் சட்டார்பூர் பேருந்து நிலையல் அருகே உள்ள ராகேஷ் சமோசா என்ற கடையைப் பற்றி முன்னதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த வன்ஷ் பகதூர் எனும் நபர் முதலமைச்சரின் உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார்.
அதில் தான் ராகேஷ் சமோசா கடையில் சமோசா வாங்கி உண்டதாகவும் ஆனால் கடைக்காரர் தனக்கு ஸ்பூன்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்காததாகவும் அளித்துள்ளார். ”இங்கு சமோசா பேக் செய்து தருபவர், கரண்டி, கிண்ணம் கொடுக்கவில்லை, விரைவில் என் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என வன்ஷ் பகதூர் புகார் அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மக்களின் பொதுப் பிரச்னைகளைத் தீர்க்க, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் இந்த முதலமைச்சர் உதவி எண் வழங்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்தில் சமோசா சாப்பிட ஸ்பூன் தரவில்லை என இந்நபர் புகார் அளித்துள்ளது முன்னதாக இணையத்தில் கேலிக்குள்ளாகி உள்ளது.
முதலில் இந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் முதலமைச்சர் ஹெல்ப்லைன் போர்ட்டலில் இத்தகைய புகார்கள் ஏற்கப்படாது எனக்கூறி புகார் குறித்த விசாரணை கைவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சமோசா அதிகம் சாப்பிடும் மத்தியப் பிரதேசம் மக்கள் பற்றி மீம்ஸ்கள் பறந்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு இணையத்தில் மகிழ்ச்சியாகக் களமாடி வருகின்றனர்.