கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா எழுப்பிய கேள்வி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஹிஜாப் வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, "நியாயமற்ற முறையில் வாதாட கூடாது. ஆடையை அணியாமல் இருப்பதும் உரிமைதானா" என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தேவ் தட் கமத், "பள்ளிகளில் யாரும் ஆடை அணியாமல் வருவதில்லை" என்றார். வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே நடைபெற்ற நீண்ட வாத பிரதி வாதத்தின்போது, நீதிபதி குப்தா பேசுகையில், "இங்குள்ள பிரச்னை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிவதை வலியுறுத்தி வருகிறது. மற்ற அனைத்து சமூகங்களும் ஆடை விதிகளை பின்பற்றுகின்றன. மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அது அணிய வேண்டும் இது அணிய வேண்டும் என்று கூறவில்லை" என்றார்.


பல மாணவர்கள் ருத்ராட்சமும் சிலுவை குறி கொண்ட செயினை அணிந்து வருவதாக வழக்கறிஞர் தெரிவித்ததற்கு, "அது சட்டைக்குள் அணியப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை யாரும் சட்டையைத் தூக்கிப் பார்க்கப் போவதில்லை" என நீதிபதி கூறினார்.


கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணையின்போது நீதிபதி இப்படி கருத்து தெரிவித்துள்ளார். 


வழக்கின் முக்கிய விவகாரத்தை திங்கள்கிழமை அன்று எழுப்பிய ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வதற்கான மத உரிமை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், சீருடையை அணிய வேண்டிய பள்ளியில், மத விதிகளை பின்பற்றலாமா? அதுதான் என் கேள்வி?" என குறிப்பிட்டுள்ளது.


அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் இன்றியமையாத நடைமுறையா என்பது குறித்து விவரித்த நீதிமன்றம், "பிரச்னையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கலாம். இது அவசியமானதாக இருக்கலாம், அவசியமில்லாமல் இருக்கலாம். நாங்கள் சொல்வது என்னவென்றால், ஒரு அரசு நிறுவனத்தில் நீங்கள் உங்கள் மத நடைமுறையை செயல்படுத்த வலியுறுத்தலாமா என்பதுதான். ஏனென்றால் நமது நாடு மதச்சார்பற்ற நாடு என அரசியலமைப்பின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது"


ஜனவரி 1 அன்று உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில், ஆறு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து இது போராட்டமாக வெடித்தது. பின்னர், இந்த விவகாரம் மாநிலம் தழுவிய பிரச்னையாக மாறியது. இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து நடத்திய எதிர்ப்பு போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. 


இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், "மாணவர்கள் வளாகத்திற்கு ஹிஜாப் அணிந்து செல்வார்கள். ஆனால், வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு அதை அகற்றிவிடுவர்" என்றார். அவர் பொய் சொல்வதாக மாணவர்கள் கூறியுள்ளனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவர்கள், பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.