மேற்குவங்க மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் மம்தா பானர்ஜி பதவியேற்று கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்


மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா, பதினாறாவது சட்டமன்றக் கூட்டத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், சிபிஐ (எம்) கட்சியின் முன்னணித் தலைவர் பீமன் போஸ் ஆகியோர் விழாவிற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


 



நாட்டின் தற்போதைய கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  அழைக்கப்படவில்லை.


மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மேற்குவங்க மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட மம்தா பேனர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.


 






 


இதற்கிடையே, மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து அந்த தொகுதி தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்  நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி 1,956 வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     


இந்திய அரசியலமைப்பு சட்டம் 164(1) பிரிவின் கீழ், முதலமைச்சர் ஆளுநரால் பதவியில் அமர்த்தப் பெறுவார் ; பிற அமைச்சர்கள் முதலமைச்சரின் தேர்வுரையின் படி ஆளுநரால் பதவியில் அமர்த்தப்பெறுவார்; அமைச்சர்கள் ஆளுநர் விழையுமளவு பதவி வகிப்பார். 


164(4) அமைசச்சர் ஒருவர் மாநிலச் சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு ஆறு மாதக் கால அளவிற்கு ஒரு உறுப்பினராக இல்லாவிடில், அந்தக் காலஅளவு கழிவுற்றதும் தம் அமைச்சர் பதவியை இழந்தவர் ஆவார்" என்று தெரிவிக்கிறது. 


எனவே, மம்தா பேனர்ஜி அடுத்த மாத காலம் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் அடுத்த 6 மாத காலம் முதல்வர் பதவியை வகிக்க முடியும் . ஆறு மாதத்திற்குள் ஏதேனும் ஒரு தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இல்லையேல், அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். 


நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் .அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களும்,  பாரதிய ஜனதா கட்சி  77 இடங்களும் கைப்பற்றின. தற்போது, 2 சட்டமன்றத் தொகுதிகள் காலியிடங்களாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.