இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,847 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 51,880 பாதிப்புகள் கண்டறியப்பட்டது. 


இருப்பினும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமான முறையில் குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 66,159 ஆக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48,621ஆகவும், திங்கட்கிழமை  51,880 ஆகவும் உள்ளது.


கடந்த 10 நாட்களாக, மகாராஷ்ட்ராவில் அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபர்களின் எண்ணிக்கை விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி 6,99, 858 பேர்  கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது 6,41,910 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 891 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 




இருப்பினும், கடந்த 3 நாட்களாக மகாராஷ்ட்ராவில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை என்னிக்கையும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, தற்போது கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.      




அதேபோன்று, கேரளா, கர்நாடகாக , உத்தர பிரதேசம், தமிழ்நாடு , டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் 15,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கண்டறிந்துள்ளன. இதில், உத்தர பிரதேசமும், டெல்லியும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான கொரோனா இருப்புகளை பதிவு செய்துள்ளது. 


கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை (Active Cases) விகிதம் குறையத் தொடங்கியுள்ளன.       




 


டெல்லியில் கோவிட்-19 பாதிப்புகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள காரணத்தால், பிராணவாயுக்கான தடையில்லா தேவை மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய/தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 


முன்னதாக, புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தீவிர கொவிட்-19 நோயாளிகளுக்கு தேவைப்படும் தடையில்லா ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்துவது குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை 2021 ஏப்ரல் 23 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நடத்தினார்.


டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங்க் மருத்துவமனை, லேடி ஹர்திங் மருத்துவ கல்லூரி மற்றும் எய்ம்ஸ், ஜஜ்ஜார், ஹரியானா ஆகிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே, 12 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த, 18 வயது முதல் 44 வயது வரையிலான 4,06,339 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. சமீபத்திய நிலவரப்படி, மொத்தம் 15,89,32,921 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.